மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் மற்றும் தாழக்கோயில் எனப்படும் பக்தவச்சலேஸ்வரர் கோயில் வளாகத்தில் திரிபுரசுந்தரி அம்பாளுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருக்கல்யாண பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண பெருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவையொட்டி தினமும் அம்பாள் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
விழாவின் மூன்றாவது நாளான இன்று அதிகார நந்தி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, திரிபுரசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளச் செய்தனர். தொடர்ந்து, கோயிலின் முக்கிய வீதிகளில் அம்பாளின் வீதியுலா நடைபெற்றது.
வீதியுலாவின்போது ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து அம்பாளை தரிசனம் செய்து வழிபட்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தலைமையில் கோயில் பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் சிறப்பாக மேற்கொண்டனர்.
