ஆடியில் பெருக்கெடுக்காத காவிரி: ஆற்றுக்குள் ஊற்று பறித்து வழிபட்ட திருச்சி பெண்கள்

திருச்சி: பருவமழை போதிய அளவில் பெய்யாததால், இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு நாளில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு இல்லாத சூழல் நிலவியது. இதனால், திருச்சியில் பெண்கள் ஆற்றுக்குள் இறங்கி ஊற்று பறித்து காவிரித் தாயை வழிபட்டனர்.

நடந்தாய் வாழி காவிரி” என்று தமிழர்கள் போற்றும் காவிரித் தாய், தாம் பாயும் இடமெல்லாம் வளமும் செழிப்பும் அருள்பவளாக கருதப்படுகிறார். ஆடி மாதத்தில் பெருக்கெடுத்து கடலுடன் சங்கமிக்கும் காவிரியை நினைவுகூரும் விழாவே ஆடிப்பெருக்கு எனும் ஐதீகம் நிலவுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18-ம் நாளன்று, காவிரி கரைகளில் டெல்டா மாவட்ட மக்கள் திரண்டு, பூ, பழம், மஞ்சள், காதோலை, கருகமணி உள்ளிட்ட மங்கலப் பொருட்களால் காவிரித் தாயை வழிபடுவது வழக்கம்.

மேலும், திருமணத்திற்குப் பிறகு பிரிந்திருக்கும் புதுமண தம்பதிகள் காவிரி கரைக்கு வந்து திருமண மாலைகளை ஆற்றில் சமர்ப்பிப்பதும், சுமங்கலி பெண்கள் கணவரின் நீண்ட ஆயுள் மற்றும் குடும்ப வளம் வேண்டி புதிய மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யத்தை மாற்றி அணிந்து வழிபடுவதும் ஆடிப்பெருக்கு மரபுகளில் ஒன்றாகும்.

தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் முக்கிய இடம் பெறும் ஆடிப்பெருக்கு, காவிரி வெள்ளம்போல் மகிழ்ச்சியும் வளமும் பெருகும் என்ற நம்பிக்கையுடன் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஆற்றுக்குள் இறங்கி வழிபாடு

பொதுவாக ஆடி மாதத்தில் கரைபுரண்டு ஓடும் காவிரியை கரையோர மக்கள் வழிபடுவர். ஆனால், இந்த ஆண்டு நீர்வரத்து குறைவாக இருந்ததால் காவிரி ஆறு ஓடைபோல் காட்சியளித்தது.

இதையடுத்து, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, குடமுருட்டி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் படித்துறை உள்ளிட்ட பல படித்துறைகள் வழியாக ஆற்றுக்குள் இறங்கிய பெண்கள் மற்றும் பொதுமக்கள், ஓடும் நீரின் அருகிலும், பல இடங்களில் ஊற்று பறித்தும் காவிரித் தாயை பக்தியுடன் வழிபட்டனர். நீர்ப்பெருக்கு இல்லாவிட்டாலும், பக்தர்களின் நம்பிக்கையும் வழிபாட்டு மரபும் வழக்கம்போல தொடர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *