சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா தொடக்கம்… கொடியேற்றத்துடன் கோலாகலம்!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாத உத்திராட நட்சத்திர நாளை முன்னிட்டு நடைபெறும் புகழ்பெற்ற ஆடித்தபசு திருவிழா, இந்தாண்டு நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
சிவனும், மகாவிஷ்ணுவும் ஒன்றே என்ற சைவ–வைணவ ஒற்றுமையை உலகறியச் செய்யும் இந்த திருவிழாவில், அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, கோமதி அம்மன் சிவிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் கொடிப்பட்டம் வீதியுலா நடைபெற்றது.
காலை 7.05 மணியளவில் அம்மன் சன்னதியில் உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்மனை தரிசித்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, ஜூலை 26-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. ஜூலை 28-ஆம் தேதி ஆடித்தபசு விழா விமரிசையாக நடைபெறுகிறது. அன்று காலை 9.30 மணிக்கு கோமதி அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் பரிவட்டம் சாத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
பிற்பகல் 12 மணி முதல் 1 மணிக்குள், தங்கச் சப்பரத்தில் தவக்கோலத்தில் கோமதி அம்மன் தெற்கு ரதவீதியில் உள்ள தவசு மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அன்றைய மாலை 6.05 மணிக்குப் பிறகு, ஹரியும் சிவனும் ஒன்றே என்பதை எடுத்துரைக்கும் வகையில், ரிஷப வாகனத்தில் சங்கரநாராயணராக சிவபெருமான் எழுந்தருளி, கோமதி அம்மனுக்கு தபசு காட்சி அளிக்கிறார். தொடர்ந்து இரவு 11.45 மணிக்குப் பிறகு, யானை வாகனத்தில் சங்கரலிங்க சுவாமியாக கோமதி அம்மனுக்கு அருள்காட்சி வழங்கும் வைபவமும் நடைபெறுகிறது.
ஜூலை 29-ஆம் தேதி, சுவாமி மற்றும் அம்மன் தனித்தனி சப்பரங்களில் ஒரே நேரத்தில் எழுந்தருளி, சப்தாவரண காட்சியால் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.
கொடியேற்ற விழாவில் தென்காசி எம்.பி. ராணி ஸ்ரீகுமார், முன்னாள் அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி, எம்.எல்.ஏ. திலீபன் ஜெய்சங்கர், சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் கவுசல்யா, நகராட்சி ஆணையர் லட்சுமி, கோயில் இணை ஆணையர் சுரேஷ், துணை ஆணையர் ரோஜாலி சுமதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
