ஆடிப்பெருக்கு கோலாகலம்: புதிய மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யம் அணிந்து பெண்கள் சிறப்பு வழிபாடு

சென்னை: தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா நேற்று பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி திருமணமான பெண்கள் புதிய மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யம் அணிந்து வழிபாடு நடத்தினர்.

தமிழர் பாரம்பரியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஆடிப்பெருக்கு விழா, ஆண்டுதோறும் ஆடி மாதத்தின் 18-ஆம் நாளில் கொண்டாடப்படுகிறது. இயற்கை வளம் பெருகி, ஆறுகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிய வேண்டும், தண்ணீர் மற்றும் உணவுப் பஞ்சம் ஏற்படக் கூடாது என்பதற்காக மக்கள் நீர்நிலைகளை வழிபடும் மரபு நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இந்த நாளில் புதிய தொழில் தொடங்கினாலோ, நிலம் உள்ளிட்ட சொத்துகளை வாங்கினாலோ வளமும் வளர்ச்சியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே நிலவுகிறது. இதனால் ஆடிப்பெருக்கு நாளில் புதிய முயற்சிகளைத் தொடங்குவதையும் பலர் சுபநாளாகக் கருதுகின்றனர்.

திருச்சியில் காவிரி கரையிலும், மதுரையில் வைகை ஆற்றங்கரையிலும், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி கரையோரங்களிலும் ஆடிப்பெருக்கு விழா வழக்கம்போல் சிறப்பாக நடைபெற்றது. இதேபோல் தமிழகம் முழுவதும் ஆறுகள், குளங்கள் மற்றும் பிற நீர்நிலைகள் அமைந்துள்ள பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டு வழிபாடு நடத்தினர்.

சென்னையில் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் திருமணமான பெண்கள் புத்தாடை அணிந்து, பழைய தாலிக்கயிற்றை மாற்றி புதிய மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யம் அணிந்து பூஜை செய்தனர். மேலும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளம் உள்ளிட்ட பல கோயில் குளங்களிலும் பக்தர்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

திருமணம் ஆகாத பெண்கள் விரைவில் நல்ல வரன் அமைய வேண்டும் என வேண்டிக்கொண்டு, சர்க்கரை பொங்கல் படையலிட்டு இறைவனை வழிபட்டனர்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு மயிலாப்பூர் கோலவிழியம்மன் கோயில், முண்டகக்கண்ணியம்மன் கோயில், பாரிமுனை காளிகாம்பாள் கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

நீர்நிலைகளுக்குச் செல்ல இயலாத சென்னைவாசிகள் பலரும் தங்களது இல்லங்களிலேயே பூஜைகள் செய்து ஆடிப்பெருக்கு விழாவை பக்தியுடன் கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *