சங்கரன்கோவிலில் ஆடித்தபசு தேரோட்டம் கோலாகலம்… திரளான பக்தர்கள் வடம் பிடித்து வழிபாடு
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் ஆடித்தபசு திருவிழாவின் 9-வது நாள் நிகழ்ச்சியாக தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி, அம்பாளை பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடித்தபசு திருவிழா தொடர்ந்து விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் கோமதி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரதவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
9-வது நாள் திருவிழாவையொட்டி நேற்று காலை கோமதி அம்மன் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து காலை 9.15 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் பக்தி முழக்கத்துடன் தேரை இழுத்தனர். ரதவீதிகளை வலம் வந்த தேர் காலை 11.15 மணியளவில் நிலையை அடைந்தது.
தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், பக்தர்களின் வசதிக்காக தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
விழாவின் உச்ச நிகழ்வான ஆடித்தபசு திருவிழா நாளை (28-ஆம் தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி மதியம் 12 மணிக்கு மேல் கோமதி அம்மன் தங்கச் சப்பரத்தில் தெற்கு ரதவீதியில் உள்ள ஆடித்தபசு மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.
அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு மேல் சங்கர நாராயண சுவாமி தவசு காட்சிக்காக புறப்படுகிறார். மாலை 6.05 மணிக்கு ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் சங்கர நாராயண சுவாமி, கோமதி அம்மனுக்கு தவசு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இரவு 11 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து இரவு 11.45 மணிக்கு சங்கரலிங்க சுவாமி, கோமதி அம்மனுக்கு தவசு காட்சி அளிக்கும் நிகழ்ச்சியுடன் ஆடித்தபசு திருவிழாவின் முக்கிய வைபவங்கள் சிறப்பாக நடைபெற உள்ளன.
