ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடாவில், இந்திரகீலாத்ரி மலையின் உச்சியில் அருள்பாலிக்கும் கனகதுர்கையம்மன் கோயில், சக்தி வழிபாட்டின் புகழ்பெற்ற தலமாக விளங்குகிறது. இங்கு மகிஷாசுரனை வதம் செய்த மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அன்னை கனகதுர்கை பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். திரேதாயுகத்தில் அன்னை இத்தலத்தில் சுயம்புவாகத் தோன்றியதாக தலபுராணம் கூறுகிறது.
பண்டைய காலத்தில் இப்பகுதி பாறைகள் நிறைந்த தரிசு நிலமாக இருந்ததால், கிருஷ்ணா நதி சீராகப் பாய முடியாமல் தடைகள் ஏற்பட்டன. அப்போது சிவபெருமான் தனது அருளால் அந்தத் தடைகளை நீக்கி, கிருஷ்ணா நதி தடையின்றி பாய வழிவகுத்தார். அதன் பின்னர் இப்பகுதி செழிப்பும் வளமுமாகத் திகழத் தொடங்கியது.

மகாபாரத காலத்தில், பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் இந்த மலையில் கடும் தவம் இருந்து, சிவபெருமானிடம் இருந்து பாசுபத அஸ்திரத்தைப் பெற்றதாக நம்பப்படுகிறது. மேலும், போரில் வெற்றி அருள வேண்டி அவர் இறைவனை வேண்டியதால், இந்தத் தலம் “விஜயவாடா” என்ற பெயரைப் பெற்றதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.
இந்திரகீலா முனிவர் இம்மலையிலேயே மலை வடிவில் தவம் செய்து வந்தார். அப்போது மகிஷாசுரன் என்ற அரக்கன் தொடர்ந்து அவருக்கு துன்பம் அளித்தாலும், முனிவர் தனது தவத்தை விடாமல் தொடர்ந்தார். அவரது பக்தியால் மகிழ்ந்த அம்பிகை நேரில் காட்சி அளித்தாள்.
அப்போது, “இந்த மலையையே தங்கள் இருப்பிடமாகக் கொண்டு, இப்பகுதி மக்களை எப்போதும் காத்தருள வேண்டும்” என்று இந்திரகீலா முனிவர் அன்னையிடம் வேண்டினார். அவரது வேண்டுகோளை ஏற்ற தேவி, மகிஷாசுரனை அழித்து, இத்தலத்திலேயே எழுந்தருளி பக்தர்களைக் காக்கத் தொடங்கினாள்.
இன்று, சுமார் 4 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில், எட்டு கரங்களிலும் தெய்வீக ஆயுதங்களை ஏந்தி, மகிஷாசுரனை காலடியில் மிதித்தபடி, பொன்னாபரணங்களும் மலர் மாலைகளும் அலங்கரித்த கனகதுர்கையம்மன், பக்தர்களுக்கு அருளும் பாதுகாப்பும் வழங்கும் சக்தி வடிவமாக விளங்குகிறாள்.
