கொரட்டூர் நாகவல்லி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா கோலாகலம்: மிளகாய் சாந்து கரைசலில் குளித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
சென்னை: சென்னை கொரட்டூரில் அமைந்துள்ள ஓம்சக்தி நாகவல்லி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பல்வேறு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். விழாவின் சிறப்பாக, மிளகாய் தூள் கலந்த சாந்து கரைசலை உடலில் ஊற்றி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
கொரட்டூர் டிஎன்ஹெச்பி குடியிருப்பு 47-வது தெருவில் அமைந்துள்ள ஓம்சக்தி நாகவல்லி அம்மன் கோயில் சுமார் 50 ஆண்டுகள் பழமையானது. ஆரம்பத்தில் வேப்பமரமும் புற்றும் மட்டுமே இருந்த இந்த இடத்தில் நாகவல்லி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்யும் புகழ்பெற்ற ஆலயமாக வளர்ந்துள்ளது.
திருமண வரம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட வேண்டுதல்கள் நிறைவேறும் தலமாக நம்பப்படும் இந்த கோயிலில், ஆடி மாதத்தை முன்னிட்டு திருவிழா உற்சாகமாக நடைபெற்று வருகிறது.
ஆடி மாதத்தின் இரண்டாவது வார திருவிழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் ஏந்தியும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
விழாவின் ஒரு பகுதியாக, மிளகாய் தூள் கலந்த சாந்து கரைசலை உடல் முழுவதும் பூசி அல்லது ஊற்றி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து மாலை நேரத்தில், 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து அம்மனை தரிசித்தனர்.
திருவிழாவின் நிறைவாக, எலுமிச்சை, செவ்வாழை, ஆப்பிள், சாத்துக்குடி, தர்பூசணி, அன்னாசி உள்ளிட்ட பல்வேறு பழங்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட நாகவல்லி அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் கொரட்டூர், அம்பத்தூர், பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், சென்னை நகரின் முக்கிய அம்மன் ஆலயங்களான மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோயில், கோலவிழி அம்மன் கோயில், பிராட்வே காளிகாம்பாள் கோயில், பாடி படவேட்டம்மன் கோயில், வில்லிவாக்கம் பாலியம்மன் கோயில் மற்றும் சூளை அங்காளம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களிலும் ஆடி மாத சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அங்கு திரளான பக்தர்கள் கூழ் வார்த்தும், பொங்கலிட்டும் அம்மனை பக்தியுடன் வழிபட்டனர்.
