மனநல நிம்மதியையும் திருமண வரத்தையும் அருளும் சோட்டானிக்கரை பகவதி அம்மன்!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில், மனநலம் தொடர்பான பிரச்சினைகள், தீய சக்திகளின் பாதிப்பு போன்றவற்றிலிருந்து விடுபட வேண்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசிக்கும் புகழ்பெற்ற சக்தி தலமாக விளங்குகிறது.

பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக நம்பப்படும் இத்தலத்தில், அன்னை ராஜராஜேஸ்வரி திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். திருமாலின் சகோதரியாகப் போற்றப்படும் தேவியின் மூலவர் சன்னதியிலேயே மகாவிஷ்ணுவும் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இதனால் பக்தர்கள், “அம்மே நாராயணா… தேவி நாராயணா…” என்ற பக்தி முழக்கத்துடன் அன்னையை வழிபடுகின்றனர்.

சோட்டானிக்கரை பகவதி அம்மன், நாளின் மூன்று வேளைகளிலும் மூன்று தெய்வீக வடிவங்களில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறாள். அதிகாலையில் வெள்ளை ஆடை அணிந்து சரஸ்வதி தேவியாக, உச்சி வேளையில் சிவப்பு ஆடை அணிந்து மகாலட்சுமியாக, மாலை நேரத்தில் நீலம் அல்லது கருநிற ஆடை அணிந்து துர்கை அம்மனாக அருள்பாலிக்கிறாள். இந்த மூன்று தரிசனங்களும் பக்தர்களுக்கு கல்வி, செல்வம் மற்றும் வீரத்தை அருளும் என நம்பப்படுகிறது.

ஆதிசங்கரருக்கு அளித்த வாக்குறுதியின்படி, கொல்லூர் மூகாம்பிகை தலத்தில் அருள்பாலிப்பதைப் போலவே சோட்டானிக்கரையிலும் தேவி எழுந்தருளியதாக ஐதீகம் கூறுகிறது. அதனால்தான் இன்றும் கொல்லூர் மூகாம்பிகை கோயிலின் நடை திறப்பதற்கு முன்பாகவே சோட்டானிக்கரையில் அதிகாலை பூஜைகள் நிறைவடைகின்றன.

இக்கோயிலின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கீழ்க்காவு பகுதியில் பத்ரகாளி அம்மன் அருள்பாலிக்கிறாள். பில்லி, சூனியம் மற்றும் தீய சக்திகளின் பாதிப்பிலிருந்து விடுபட வேண்டி ஏராளமான பக்தர்கள் இங்கு சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்கின்றனர்.

மேலும், மாசி மகம் நாளன்று மதியம் 2 மணியளவில் தேவி தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். அன்றைய தினத்தில் பக்தியுடன் அம்மனை தரிசித்து வழிபட்டால், திருமணத் தடை நீங்கி நல்ல வரன் அமையும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *