திருச்செந்தூருக்கு இணையான நதிக்கரைத் திருத்தலம்! புதுக்குடி சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாகத் திகழ்வது திருச்செந்தூர். கடலலைகளின் நடுவே அருள்பாலிக்கும் செந்தில் ஆண்டவரை நாடி நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். திருச்செந்தூர் கடற்கரைத் திருத்தலம் என்றால், அதற்கு இணையாக தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் மற்றொரு சிறப்புமிக்க முருகன் தலம் உள்ளது. அதுதான் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள புதுக்குடி நதிக்கரை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.

திருநெல்வேலி–திருச்செந்தூர் சாலையில், புதுக்குடியையும் ஸ்ரீவைகுண்டத்தையும் இணைக்கும் பாலத்தின் அருகில், தாமிரபரணி நதிக்கரையில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

திருச்செந்தூரை நினைவூட்டும் சிறப்பு

திருச்செந்தூரில் மூலவர் தவநிலையில் இருந்து சிவபெருமானை வழிபடுவதாக ஐதிகம். இதன் அடையாளமாக செந்தில் ஆண்டவர் சந்நிதியில் அவருடைய இடப்புறத்தில் சிவலிங்கம் காணப்படுகிறது.

அதேபோன்ற சிறப்பை புதுக்குடி நதிக்கரை முருகன் கோயிலிலும் காணலாம். இங்கு மூலவரின் இடப்புறத்தில் சிவபெருமான் லிங்கத் திருமேனியுடன் பார்வதி அம்பிகையுடன் அருள்பாலிக்கிறார்.

சிறிய ஆலயமாக இருந்தாலும், இத்தலம் தனித்துவமான சாந்நித்தியத்துடன் விளங்குகிறது. வெளிப் பிராகாரத்தில் கன்னிமூல விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பாலதண்டாயுதபாணி ஆகிய தெய்வங்களை தரிசிக்கலாம். உள் பிராகாரத்தில் பைரவர் அருள்பாலிக்கிறார்.

இரு உற்சவர்கள்

இத்தலத்தில் ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீசண்முகப் பெருமான் என இரு உற்சவ மூர்த்திகள் உள்ளனர். இருவரும் தேவியருடன் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் ஆகியவை இக்கோயிலின் முக்கிய திருவிழாக்களாகும். குறிப்பாக கந்தசஷ்டி விழா சூரசம்ஹாரம், திருக்கல்யாணம், ஊஞ்சல் உற்சவம் என விமரிசையாக நடைபெறும்.

திருமணத் தடை நீக்கும் தலவிருட்ச வழிபாடு

இக்கோயிலின் தலவிருட்சமாக அரச மரமும் வேப்ப மரமும் பின்னிப் பிணைந்த நிலையில் காணப்படுகின்றன. அவற்றின் அடியில் நாகர் சிலைகளும் அமைந்துள்ளன.

திருமணத் தடை உள்ளவர்கள் இந்த அரச–வேம்பு மரங்களுக்கு சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். தாமிரபரணி நதியில் நீராடி, ஈரத்துணியுடன் வந்து அரச–வேம்பு மரங்களுக்கு 11 வகையான அபிஷேகம் செய்கின்றனர்.

அரச மரத்துக்கு வெள்ளை வேட்டியும், வேப்ப மரத்துக்குச் சிவப்பு நிறப் பட்டும் சாத்தி, ரோஜா மாலை அணிவிக்கின்றனர். மேலும் வேப்ப மரத்துக்குத் திருமாங்கல்யம் அணிவித்து, சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியமாகப் படைத்து வழிபடுகின்றனர்.

அதே நாளில் மூலவரான முருகப்பெருமானுக்கும் 11 வகையான அபிஷேகம் செய்வது சிறப்பு. முருகனுக்கு வெள்ளை வஸ்திரம், மல்லிகைப்பூ மாலை அணிவித்து, வள்ளி–தெய்வானை தேவியருக்கு சிவப்பு நிறப் பட்டும் ரோஜா மாலையும் சாத்துகின்றனர். முருகன் சந்நிதியில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, ஐந்து நெய் விளக்குகள் ஏற்றி மனமுருக வழிபடுகின்றனர்.

இவ்வாறு வழிபட்டால் திருமணத் தடைகள் மற்றும் தோஷங்கள் நீங்கி, விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குறிப்பாக அவரவர் ஜன்ம நட்சத்திர நாளில் அதிகாலை 5 மணி முதல் 7 மணிக்குள் இந்த வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு என்று கூறப்படுகிறது.

பிரிந்த தம்பதிகள் ஒன்றுசேர அருளும் முருகன்

கந்தசஷ்டி காலத்தில் முறைப்படி விரதம் இருந்து, நதிக்கரை முருகனை தரிசித்து வழிபடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது.

கந்தசஷ்டி விழாவையொட்டி நடைபெறும் முருகப்பெருமானின் திருக்கல்யாணம் மற்றும் ஊஞ்சல் உற்சவத்தின்போது, முருகனுக்கும் வள்ளி–தெய்வானை தேவியருக்கும் ரோஜா மாலை சாத்தி வழிபடுகின்றனர்.

இந்த வழிபாட்டின் மூலம் இல்லறத்தில் ஒற்றுமை பெருகும்; மன வேறுபாட்டால் பிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்றுசேர்வார்கள் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

தடைகள் நீங்க அருளும் பாலதண்டாயுதபாணி

தைப்பூசத் திருநாளில் கோயிலில் அருள்பாலிக்கும் பாலதண்டாயுத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் விசேஷ தீபாராதனையும் நடைபெறுகின்றன. இந்த வைபவத்தை தரிசித்து முருகப்பெருமானை வழிபட்டால், வாழ்வில் ஏற்பட்டுள்ள தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும் என்பது ஐதிகம்.

நதித் தீர்த்தத்துக்கும் முன்னோர் வழிபாட்டுக்கும் சிறப்பு

நதிக்கரையில் அமைந்துள்ள ஆலயம் என்பதால், அருகிலுள்ள பல திருத்தலங்களுக்கு வேண்டுதல் நிறைவேற்றச் செல்லும் பக்தர்கள் இங்கிருந்து தாமிரபரணி நதித் தீர்த்தத்தையும் பாற்குடத்தையும் எடுத்துச் செல்வது வழக்கம்.

ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற நாள்களில் தாமிரபரணி நதிக்கரையில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபடுவதும் இத்தலத்தின் மற்றொரு சிறப்பாகக் கருதப்படுகிறது.

நவகயிலாயத் தலங்களையும் நவதிருப்பதிகளையும் தரிசிக்கச் செல்லும் பக்தர்கள், அருகிலுள்ள இந்த நதிக்கரை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலையும் தவறாமல் தரிசித்து வழிபடலாம்.

கடல்கரையில் அருளும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவரைப் போல, தாமிரபரணி நதிக்கரையில் அருள்பாலிக்கும் இந்த நதிக்கரை முருகனும் பக்தர்களுக்கு அருளும் அற்புதத் திருத்தலமாகத் திகழ்கிறார். முருகப்பெருமானின் திருவருளால் வாழ்க்கையில் உள்ள தடைகள் விலகி, மனதில் நிம்மதியும் இல்லத்தில் மகிழ்ச்சியும் பெருகட்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *