மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு வன பத்ரகாளியம்மன் கோயில், பக்தர்களால் மிகவும் சக்தி வாய்ந்த தலமாக போற்றப்படுகிறது. இத்தலத்தின் மூலவராக வன பத்ரகாளியம்மன் அருள்பாலிக்கிறார். அம்மன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். கருவறையில் மூலவர் லிங்க வடிவிலும், அன்னை பத்ரகாளியம்மன் நின்ற திருக்கோலத்திலும் பக்தர்களுக்கு அருள்காட்சி அளிக்கிறார். இத்தலத்தின் தலவிருட்சமாக தொரத்தி மரம் விளங்குகிறது.

மரணமில்லா வரம் பெற்ற மகிஷாசுரனை அழிக்க, அன்னை பராசக்தி சிவபெருமானை நினைத்து இத்தலத்தில் தவமும் பூஜையும் செய்ததாக தலபுராணம் கூறுகிறது. கோயிலின் நுழைவாயிலில் பகாசூரன் மற்றும் பீமன் ஆகியோர் காவல் தெய்வங்களாக அருள்பாலிக்கின்றனர். மேலும், கிழக்கு நோக்கிய சந்நிதியில் முனியப்பன் எழுந்தருளியுள்ளார்.
கோயிலின் மேற்குப் பகுதியில் பாயும் பவானி ஆற்றில் நீராடி, அதன் கரையில் உள்ள முத்தமிழ் விநாயகரை முதலில் தரிசித்துவிட்டு, பின்னர் வன பத்ரகாளியம்மனை வழிபடுவது பக்தர்களின் மரபாக இருந்து வருகிறது.
செய்வினை தோஷம், பில்லி, சூனியம் போன்ற பாதிப்புகள் நீங்கவும், குடும்பத்தில் நிம்மதி நிலவவும் பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபடுகின்றனர். குழந்தைப்பேறு வேண்டி பிரார்த்திப்பவர்களும் ஏராளம். புதிய தொழில் தொடங்குபவர்கள், திருமண பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பவர்கள் உள்ளிட்டோர், அம்மன் முன் பூ வைத்து உத்தரவு கேட்டு பின்னரே தங்கள் நல்ல காரியங்களைத் தொடங்குவது இன்றளவும் தொடரும் நம்பிக்கையாக உள்ளது.
இதற்காக சிவப்பு மற்றும் வெள்ளை மலர்களை தனித்தனியாக பொட்டலமிட்டு அம்மன் திருவடியில் சமர்ப்பிக்கின்றனர். மனதில் நினைத்த மலர் கிடைத்தால், அதையே அம்மனின் அருள்வாக்காகக் கருதி தங்கள் முயற்சிகளை தொடங்குகின்றனர். மேலும், இத்தலத்தில் அம்மனுக்குரிய பாரம்பரிய நேர்த்திக்கடனாக கிடா பலியிடும் வழக்கமும் நடைபெற்று வருகிறது.
