சென்னை: தமிழர்களின் பாரம்பரிய திருநாள்களில் ஒன்றான ஆடிப்பெருக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் திருமணமான பெண்கள் திருமாங்கல்ய சரடு (தாலி கயிறு) மாற்றுவது சிறப்பு வாய்ந்த வழக்கமாகும். எந்த நேரத்தில் மாற்றினால் சிறப்பு என்பதையும், ஆடிப்பெருக்கின் முக்கியத்துவத்தையும் தெரிந்துகொள்வோம்.

ஆடி மாதம் இயற்கை வளம் பெருகும் காலமாகக் கருதப்படுகிறது. பருவமழையால் ஆறுகள் நிரம்பி வழிவதால், குறிப்பாக காவிரி உள்ளிட்ட நதிகள் பாயும் பகுதிகளில் மகிழ்ச்சியுடன் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் புதுவெள்ளத்தை தெய்வமாகக் கருதி மக்கள் ஆறுகளில் புனித நீராடி, மலர்கள் மற்றும் பூஜைப் பொருட்களை சமர்ப்பித்து வழிபடுவது வழக்கம்.

விவசாயிகளுக்கு ஆடிப்பெருக்கு மிகவும் முக்கியமான நாளாகும். “ஆடிப்பட்டம் தேடி விதை” என்ற பழமொழிக்கேற்ப, இந்த நாளில் இயற்கைக்கு நன்றி செலுத்தி புதிய விவசாயப் பணிகளைத் தொடங்குவார்கள். ஆற்றங்கரைகளில் அமைக்கப்பட்டுள்ள பதினெட்டு படிகளில் பூஜை செய்து வளமான விளைச்சல் வேண்டி பிரார்த்தனை செய்வதும் பாரம்பரியமாக இருந்து வருகிறது.

ஆற்றுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே கோலம் போட்டு, காவிரி, வைகை, தாமிரபரணி போன்ற புனித நதிகளை மனதில் நினைத்து வழிபட்டு ஆடிப்பெருக்கை சிறப்பாகக் கொண்டாடலாம். இந்த நாளில் விரதம் இருந்து இறைவனை வழிபட்டால் செல்வ வளம் பெருகும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.

ஆடிப்பெருக்கின் மற்றொரு முக்கியமான பாரம்பரியம் திருமணமான பெண்கள் திருமாங்கல்ய சரடு மாற்றுவது ஆகும். புதிய மஞ்சள் கயிற்றில் தாலியை மாற்றுவதன் மூலம் கணவருக்கு நீண்ட ஆயுளும், குடும்பத்தில் நலனும் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், குழந்தைப்பேறு மற்றும் குடும்ப வளம் வேண்டியும் பெண்கள் இந்த நாளில் சிறப்பு பூஜை செய்து வழிபடுகின்றனர்.

2026 ஆடிப்பெருக்கு நல்ல நேரம்:

இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 3, 2026 (திங்கட்கிழமை) அன்று வருகிறது. திருமாங்கல்ய சரடு மாற்றுவதற்கு,

  • காலை: 7.45 மணி முதல் 8.45 மணி வரை
  • மாலை: 3.15 மணி முதல் 4.15 மணி வரை

மிகவும் உகந்த நேரமாகக் கருதப்படுகிறது.

அன்று காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை ராகுகாலம் இருந்தாலும், மேற்கண்ட சுப நேரத்தில் திருமாங்கல்ய சரடு மாற்றுவதில் குறை இல்லை என்று பலர் நம்புகின்றனர். இருப்பினும், ராகுகாலத்தில் மாற்ற விருப்பமில்லாதவர்கள் மாலை 3.15 மணி முதல் 4.15 மணி வரையிலான நல்ல நேரத்தைத் தேர்வு செய்து திருமாங்கல்ய சரட்டை மாற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *