ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா: பெரியாழ்வார் மங்களாசாசன உற்சவம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடைபெற்று வரும் ஆடிப்பூரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பெரியாழ்வார் மங்களாசாசனம் மற்றும் 5 கருட சேவை உற்சவம் இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா ஆகஸ்ட் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் இரவு 16 வண்டி சப்பரமும், 4-ம் நாள் விழாவில் ரெங்கமன்னார் கோவர்த்தன கிருஷ்ணர் அலங்காரத்திலும், ஆண்டாள் சேஷ வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஆடிப்பூரக் கொட்டகையில் இன்று மதியம் 12 மணியளவில் பெரியாழ்வார் எழுந்தருளினார். தொடர்ந்து தனித்தனி பல்லக்குகளில் எழுந்தருளிய பெரிய பெருமாள், காட்டழகர் கோயில் சுந்தர்ராஜபெருமாள், திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள், நின்ற நாராயண பெருமாள் கோயில் திருத்தங்கல் அப்பன் ஆகியோருக்கு பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்தார்.
மேலும், மூக்குத்தி சேவையில் ரெங்கமன்னாருடன் எழுந்தருளிய ஆண்டாள் தாயாருக்கும் பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்தார். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று இரவு 10 மணிக்கு மேல் 5 கருட சேவை உற்சவம் நடைபெற உள்ளது. இதில் பெரிய பெருமாள், ரெங்கமன்னார், திருத்தங்கல் அப்பன், சுந்தர்ராஜபெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள் ஆகியோர் கருட வாகனங்களிலும், ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும், பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.
ஆடிப்பூர விழாவின் 7-ம் நாள் நிகழ்வாக ஆகஸ்ட் 12-ம் தேதி இரவு கிருஷ்ணன்கோவிலில் ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயனித்திருக்கும் சயன சேவை உற்சவம் நடைபெறுகிறது. விழாவின் உச்ச நிகழ்வான ஆடிப்பூர தேரோட்டம் ஆகஸ்ட் 14-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சர்க்கரையம்மாள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
