ஆடிக்கிருத்திகை முருகப்பெருமானை வழிபடுவதற்கு மிகவும் சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை எப்போது வருகிறது என்பதில் பக்தர்களிடையே குழப்பம் நிலவுகிறது. பல நாள்காட்டிகளில் ஆகஸ்ட் 6, 2026 ஆடிக்கிருத்திகை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து பல ஆலயங்களிலும் அன்றே சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அதே நேரத்தில், சிலர் ஆகஸ்ட் 7, 2026 ஆடிக்கிருத்திகை தினமாகக் குறிப்பிடுகின்றனர்.

பஞ்சாங்கக் கணக்கின்படி, ஆகஸ்ட் 6-ம் தேதி மாலை 6.19 மணிக்கு கிருத்திகை நட்சத்திரம் தொடங்கி, ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 4.15 மணி வரை நீடிக்கிறது. இதனால் இரண்டு நாட்களிலும் கிருத்திகை நட்சத்திரத்தின் தொடர்பு இருப்பதால், பக்தர்கள் தங்களது வசதிக்கேற்ப எந்த நாளிலும் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடலாம்.

குறிப்பாக, ஆகஸ்ட் 7-ம் தேதி ஆடி வெள்ளிக்கிழமையாகவும், காலை வேளையில் கிருத்திகை நட்சத்திரமும் இருப்பதால், அன்றைய தினம் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

காலை எழுந்து நீராடி, முருகப்பெருமானை மனதில் நினைத்து, சரவணபவ மந்திரத்தை ஜபித்து வழிபடலாம். திருப்புகழ், வேல்மாறல், கந்த சஷ்டிக் கவசம் போன்றவற்றைப் பாராயணம் செய்வதும் சிறப்பு.

முழுமையாக உண்ணாநோன்பு இருக்க முடியாதவர்கள் தங்களால் இயன்ற முறையில் ஒருவேளை உணவு எடுத்துக்கொண்டு பக்தியுடன் வழிபடலாம். விரதத்தின் முக்கிய நோக்கம் முருகப்பெருமானை மனதில் நிறுத்தி, அவரது நாமத்தைச் சொல்லி, பக்தியுடன் வழிபடுவதுதான்.

எனவே, இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகையில் ஆகஸ்ட் 6 அல்லது ஆகஸ்ட் 7 ஆகிய இரு நாட்களில் உங்களுக்கு வசதியான நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடலாம். குறிப்பாக ஆகஸ்ட் 7-ம் தேதி கிருத்திகை நட்சத்திரமும் ஆடி வெள்ளிக்கிழமையும் இணைவதால், அந்த நாளில் வழிபாடு செய்வது விசேஷமாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *