அன்னை காமாட்சி மற்றும் முருகப்பெருமானின் அருளை ஒருசேர வழங்கும் அருணகிரிநாதரின் தேவேந்திர சங்க வகுப்பு!

முருகப்பெருமான் மீது ஆயிரக்கணக்கான திருப்புகழ் பாடல்களை அருளிய அருணகிரிநாதர் இயற்றிய அரிய மற்றும் சக்தி மிகுந்த பாடல்களில் முக்கியமானது தேவேந்திர சங்க வகுப்பு. பலருக்கும் அதிகம் அறிமுகமில்லாத இந்த முருகன் துதிப்பாடல், அன்னை காமாட்சியின் அருளையும், முருகப்பெருமானின் பேரருளையும் ஒரே நேரத்தில் பெற்றுத் தரும் மகத்துவம் வாய்ந்ததாக போற்றப்படுகிறது.

உலகில் பல்வேறு தெய்வங்கள் வழிபடப்பட்டாலும், அவை அனைத்திலும் ஒரே பரம்பொருளின் அருள் விளங்குகிறது என்பதை உணர்த்தும் வகையில் இந்தப் பாடலை அருணகிரிநாதர் அமைத்துள்ளார். அதனால், இந்த பாடல் வெறும் துதிப்பாடலாக மட்டுமல்லாமல், உயர்ந்த தத்துவத்தை எடுத்துரைக்கும் அருள்மொழியாகவும் கருதப்படுகிறது.

மொத்தம் 16 வரிகளைக் கொண்ட இந்த தேவேந்திர சங்க வகுப்பில், முதல் 12 வரிகள் அன்னை காமாட்சி அம்மனைப் போற்றுகின்றன. அடுத்த இரண்டு வரிகள் முருகப்பெருமானின் மகிமையைப் புகழ்கின்றன. இறுதி இரண்டு வரிகள் விநாயகப் பெருமானை வணங்குகின்றன.

பொதுவாக எந்தத் துதிப்பாடலாக இருந்தாலும் முதலில் விநாயகரை வணங்குவது மரபு. ஆனால், அருணகிரிநாதர் இந்தப் பாடலில் விநாயகரை இறுதியில் போற்றியிருப்பது தனிச்சிறப்பாகும். இதன் மூலம், எப்போதும் கணபதியை தியானிப்பவர்களின் இதயத்தில் முருகப்பெருமான் குடிகொள்வார் என்ற ஆன்மிக உண்மையை உணர்த்தியுள்ளார். அதே சமயம், கணபதி வழிபாடும் முருக வழிபாடும் ஒன்றுக்கொன்று துணைபுரியும் உயர்ந்த வழிபாட்டு முறைகள் என்பதையும் எடுத்துரைக்கிறார்.

இந்தப் பாடலின் நிறைவுப் பகுதியில், செந்தில்நாதனாக திருச்செந்தூரில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானை பக்தியுடன் பாடி வழிபடுபவர்களை, இந்திரலோக தேவர்கள் கூட வந்து வணங்கி ஆசீர்வதிப்பார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள், இந்த தேவேந்திர சங்க வகுப்பை “இந்திராக்ஷி” என்றும், அம்பாள் வழிபாட்டில் மிக உயர்ந்ததாகக் கருதப்படும் ஷோடஷாக்ஷரீ மந்திரத்திற்கு இணையான மந்திரம் என்றும் சிறப்பித்துள்ளார். அனைத்து சக்தி மந்திரங்களிலும் தலைசிறந்ததாக போற்றப்படும் அந்த மந்திரத்துக்கு இணையாக இந்தப் பாடல் கருதப்படுவது, இதன் ஆன்மிக மகத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

இந்த தேவேந்திர சங்க வகுப்பை தினமும் பக்தியுடன் பாராயணம் செய்வதால் அன்னை பராசக்தியின் அருளும், முருகப்பெருமானின் திருவருளும் ஒருசேர கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், தீவிரமான கர்மவினைகள் நீங்கி, உடல் மற்றும் மனவேதனைகள் விலகி, மன அமைதி, செல்வ வளம், குடும்ப நலம் மற்றும் வாழ்வில் நிலையான முன்னேற்றம் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

தேவேந்திர சங்க வகுப்பு

தரணியில் அரணிய முரண் இரணியன் உடல்தனை நக நுதிகொடு
சாடோங்கு நெடுங்கிரி ஓடேந்து பயங்கரி
தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை
தாதாம்புய மந்திர வேதாந்த பரம்பரை

சரிவளை விரிசடை எரிபுரை வடிவினள் சததள முகுளித
தாமாங்குசம் என்றிரு தாளாந்தர அம்பிகை
தருபதி சுரரொடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி
தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி

இரண கிரண மடமயில் ம்ருகமத புளகித இளமுலை இள
நீர் தாங்கி நுடங்கிய நூல்போன்ற மருங்கினள்
இறுகிய சிறுபிறை எயிறுடை யமபடர் எனதுயிர் கொளவரின்
யான் ஏங்குதல் கண்டெதிர் தான் ஏன்று கொளும் குயில்

இடுபலி கொடுதிரி இரவலர் இடர் கெட இடு மன கரதல
ஏகாம்பரை இந்திரை மோகாங்க சுமங்கலை
எழுதிய படமென இருளறு சுடரடி இணைதொழு மவுனிகள்
ஏகாந்த சுகந்தரு பாசாங்குச சுந்தரி

கரணமு மரணமு மலமொடு முடல்படு கடுவினை கெட நினை
காலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ்
கனலெரி கணபண குணமணி யணிபணி கனவளை மரகத
காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள்

கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி கவுரி கமலை குழை
காதார்ந்த செழும் கழுநீர் தோய்ந்த பெருந்திரு
கரைபொழி திருமுக கருணையில் உலகெழு கடனிலை பெறவளர்
காவேந்திய பைங்கிளி மாசாம்பவி தந்தவன்

அரண் நெடு வட வரை அடியொடு பொடிபட அலைகடல் கெடஅயில்
வேல்வாங்கிய செந்தமிழ் நூலோன் குமரன்குகன்
அறுமுக னொருபதொ டிருபுயன் அபிநவன் அழகிய குறமகள்
தார்வேய்ந்த புயன் பகையா மாந்தர்கள் அந்தகன்

அடன்மிகு கடதட விகடித மதகளிற் அனவரதமும் அகலா
மாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில்
அதிபதி எனவரு பொருதிறல் முருகனை அருள்பட மொழிபவர்
ஆராய்ந்து வணங்குவர் தேவேந்திர சங்கமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *