ஆடிப்பெருக்கு விழா: கிருஷ்ணகிரி அணையில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் – தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடி வழிபாடு
கிருஷ்ணகிரி: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கிருஷ்ணகிரி அணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு, தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடி இறைவனை வழிபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு (ஆடி 18) விழா இன்று கிருஷ்ணகிரி அணை, மஞ்சமேடு, தீர்த்தம், அனுமன் தீர்த்தம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, கிருஷ்ணகிரி அணை செல்லியம்மன் கோயில், அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் மற்றும் பச்சிகானப்பள்ளி மாரியம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மேலும், அணை வளாகத்தில் சுவாமி வீதியுலாவும் சிறப்பாக நடைபெற்றது.
ஆடிப்பெருக்கு விழாவில் பங்கேற்க கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
பக்தர்களில் பெரும்பாலானோர் மார்கண்டேஸ்வரர் ஆலயத்தின் அருகிலுள்ள நந்தியிலிருந்து வரும் புனித நீரிலும், தென்பெண்ணை ஆற்றிலும் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பெண்கள் மற்றும் இளைஞர்கள் கைகளை தலைக்கு மேல் உயர்த்திப் பிடிக்க, கோயில் பூசாரி சாட்டையால் கைகளில் அடிக்கும் பாரம்பரிய வழிபாட்டு நிகழ்வும் நடைபெற்றது.
விழாவையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா உத்தரவின் பேரில், டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. அதேபோல், அவதானப்பட்டி சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லத்திலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
தென்பெண்ணை ஆற்றில் 985 கனஅடி தண்ணீர் திறப்பு
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த சில நாட்களாக கிருஷ்ணகிரி அணையிலிருந்து விநாடிக்கு 985 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக பெண்ணேஸ்வரமடம், நெடுங்கல், அகரம், மஞ்சமேடு உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர்.
இதனிடையே, கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று விநாடிக்கு 546 கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில், இன்று காலை அது 556 கனஅடியாக உயர்ந்தது. 52 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 46.85 அடியாக பதிவாகியுள்ளது. அணையிலிருந்து பாசனத் தேவைகளுக்கும், தென்பெண்ணை ஆற்றுக்கும் விநாடிக்கு 985 கனஅடி தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருகிறது.
