சதுரகிரி: சித்தர்கள் வாழும் புண்ணிய பூமியில் வனகாளி, பிலாவடி கருப்பரின் தெய்வீக மகிமை
சதுரகிரி… சித்தர்கள் தவம் புரியும் புனித மலை. இந்த மலையை ஒருமுறை தரிசித்தாலே வாழ்க்கையில் சிவானுபவம் நிறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதற்கு காரணம், சிவலிங்கத்தின் 96 வகை வடிவங்களும் இம்மலையில் இருப்பதாகச் சொல்லப்படுவதுதான். அவற்றை அனைத்தையும் தரிசிப்பது அனைவருக்கும் சாத்தியமில்லை என்றாலும், குறிப்பிட்ட ஆறு மகாலிங்கங்களை தரிசித்தாலே இப்பிறவியின் பெரும்பேறு கிடைக்கும் என சித்தர்கள் கூறியுள்ளனர்.ந்த ஆறு லிங்கங்கள் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி லிங்கம், இரட்டை லிங்கங்கள், கண லிங்கம், பெரிய மகாலிங்கம் ஆகியவையாகும். இவற்றுடன், சதுரகிரி முழுவதும் எண்ணற்ற தெய்வீக சந்நிதிகளும், அரிய ஆன்மிக ரகசியங்களும் நிறைந்துள்ளன.
மானுட வடிவில் சஞ்சரிக்கும் வனகாளி
சித்தர்களின் தாயாகப் போற்றப்படும் வாலாம்பிகை, சுந்தர மகாலிங்க சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டபோது ஈசனுக்குத் துணையாக அரூப வடிவில் வந்ததாக ஐதீகம் கூறுகிறது. பின்னர், அம்பிகையும் நிரந்தரமாக இத்தலத்தில் தங்க வேண்டும் என சித்தர்கள் தவம் புரிந்தனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற வாலாம்பிகை, ஆனந்தவல்லி என்ற பெயரில் லிங்க ரூபிணியாக இங்கு அருள்பாலிக்கத் தொடங்கினாள்.
சுந்தர மகாலிங்க சந்நிதியின் பின்புறத்தில் வனகாளி அம்மன் அருள்பாலிக்கிறார். பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் சித்தர்கள் எரிநட்சத்திர வடிவில் வந்து சுந்தர மகாலிங்க சுவாமியையும் ஆனந்தவல்லியையும் வழிபடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். வனகாளியை தரிசித்து வழிபட்டால் அனைத்து யோகங்களிலும் தேர்ச்சி பெறும் அருள் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.
இன்றளவும் சதுரகிரியில் வாழும் பழங்குடியினருக்கு வனகாளி மனித உருவில் காட்சி அளிப்பதாகக் கூறப்படுகிறது. மலையில் வளரும் அரிய மூலிகைகளையும் மறைந்திருக்கும் செல்வங்களையும் பாதுகாக்கும் காவல் தெய்வமாகவும் இவரை பக்தர்கள் போற்றுகின்றனர்.
ஒரு நாள் சிறுமியிடம் மனித உருவில் தோன்றி, “வனகாளி கோயிலுக்கு செல்லும் வழி எது?” என்று கேட்டாராம். அதற்கு அந்தச் சிறுமி, “நீதானே வனகாளி! தினமும் உன்னைப் பார்க்கிறேனே; நீ இருக்கும் இடத்துக்கே என்னிடம் வழி கேட்கிறாயே!” என்று பதிலளித்ததாக கூறப்படுகிறது. அதைக் கேட்ட வனகாளி புன்னகையுடன் மறைந்துவிட்டாராம்.
சந்தன மகாலிங்க சந்நிதியிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ள வனகாளி சந்நிதியை வழிபட்டால், வாழ்விலுள்ள அச்சங்களும் பயங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஒரே ஒரு காய்தான் காய்க்கும் அதிசய பலா
சுந்தர மகாலிங்க கோயிலை அடைவதற்கு முன்பாக பலா மரத்தடியில் பிலாவடி கருப்பர் அருள்பாலிக்கிறார். சதுரகிரியின் காவல் தெய்வமாகப் போற்றப்படும் இவருக்கு, சுந்தர மகாலிங்க சுவாமிக்கு உள்ள மகிமையே உண்டு என்று பக்தர்கள் கருதுகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை எதிரிகள் தாக்க வந்தபோது, அன்னையின் ஆபரணங்களை பாதுகாத்தவர் பிலாவடி கருப்பரே எனும் புராணக் கதை பரவலாக கூறப்படுகிறது. பாதுகாப்பாக வைத்திருந்த அனைத்து ஆபரணங்களையும் பின்னர் எந்தக் குறையும் இல்லாமல் திருப்பிக் கொடுத்ததாகவும் நம்பப்படுகிறது.
பிலாவடி கருப்பர் ஆலயத்துக்கு அருகில் உள்ள தைலக்கிணறு மிகவும் புகழ்பெற்றது. மீனாட்சி அம்மனின் ஆபரணங்கள் இந்தக் கிணற்றில்தான் பாதுகாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், வாமதேவர் சிவாலயம் கட்டுவதற்காக காலங்கி சித்தரிடம் உதவி கேட்டபோது, ரசவாத வித்தையின் மூலம் தயாரிக்கப்பட்ட தைலத்தால் தாமிரத்தைத் தங்கமாக மாற்றி அவருக்கு வழங்கினார் சித்தர். தேவையான அளவு தங்கத்தை எடுத்துக்கொண்ட வாமதேவர், மீதமிருந்த பொன்னையும் தைலத்தையும் சித்தரிடம் ஒப்படைத்தார்.
அந்த அளவற்ற செல்வம் தவறானவர்களின் கைகளில் சேரக்கூடாது என்பதற்காக, சித்தர் அவற்றை பலா மரத்தடியில் இருந்த கிணற்றில் வைத்துவிட்டு, மதுரையில் காவல் காத்து வந்த கருப்பரை அழைத்து அந்த புதையலுக்குக் காவலாக நியமித்ததாக திருக்கதை கூறுகிறது. அதனால் இன்று வரை சொர்ணத்தைக் காக்கும் காவல் தெய்வமாக பிலாவடி கருப்பர் போற்றப்படுகிறார்.
இவரது சந்நிதியில் உள்ள பலா மரத்தில் ஒரே ஒரு பலாக்காய் மட்டுமே காய்க்கும். அந்தக் காய் தரையில் விழுந்த பிறகே அடுத்த காய் தோன்றும் என்ற அதிசயம் இன்றும் தொடர்கிறது என பக்தர்கள் கூறுகின்றனர்.
மேலும், சதுரகிரி மலையேற்றம் மேற்கொள்ளும் பக்தர்கள், மேலே செல்லும் முன்பும் கீழிறங்கும் போதும் பிலாவடி கருப்பரிடம் அனுமதி பெற்று பயணிப்பது மரபாக உள்ளது. அவருடைய சந்நிதிக்கு எதிரே எப்போதும் வெந்நீரைப் போல கொதித்துக்கொண்டே இருக்கும் இயற்கைச் சுனையும் காணப்படுகிறது.
பயணிகளுக்கான முக்கிய அறிவுரை
சதுரகிரி மலைப்பயணம் ஆன்மிக அனுபவத்தை அளித்தாலும், அது சற்றுக் கடினமான மலையேற்றமாகும். எனவே, உரிய அனுமதி பெற்று, அனுபவமிக்க வழிகாட்டியுடன் மட்டுமே பயணம் மேற்கொள்வது நல்லது. உடல்நலம் மற்றும் உடல் தகுதியை உறுதிப்படுத்திக்கொண்டு மலை ஏறுவது பாதுகாப்பான பயணத்திற்கு அவசியம்.
