இறைவனுக்கு அன்புடனும் பக்தியுடனும் சமர்ப்பிக்கப்படும் உணவு நைவேத்தியம் என்று அழைக்கப்படுகிறது. அந்த நைவேத்தியம், இறைவனின் அருளைப் பெற்று மீண்டும் நமக்கு வழங்கப்படும்போது பிரசாதம் ஆகிறது. இதன் ஆழமான பொருளை விளக்கும் அழகிய நிகழ்வு, ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் குசேலரின் வாழ்க்கையில் இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீகிருஷ்ணரும் குசேலரும் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் ஒன்றாக கல்வி கற்ற நெருங்கிய நண்பர்கள். குருகுல வாசம் முடிந்த பிறகு, கிருஷ்ணர் துவாரகையின் அரசராக உயர்ந்தார். ஆனால் குசேலர் கடுமையான வறுமையில் வாழ்ந்தார்.
ஒருநாள், தனது வறுமையைப் போக்க கிருஷ்ணரைச் சந்திக்குமாறு குசேலரின் மனைவி அவரிடம் கூறினாள். நண்பரிடம் உதவி கேட்க மனம் வராத குசேலர், மனைவியின் வற்புறுத்தலால் துவாரகை நோக்கிப் புறப்பட்டார். நண்பரை வெறுங்கையுடன் சந்திக்க விரும்பாத அவர், தன்னால் இயன்ற எளிய பரிசாக சிறிதளவு அவலை வாங்கிச் சென்றார்.

துவாரகை அரண்மனைக்குச் சென்ற குசேலரை, அவரது ஏழ்மையான தோற்றத்தால் காவலர்கள் முதலில் உள்ளே அனுமதிக்கவில்லை. பின்னர் செய்தி அறிந்த கிருஷ்ணர் தாமே ஓடி வந்து, நண்பரை அன்புடன் கட்டித் தழுவி வரவேற்று, ருக்மணியுடன் சேர்ந்து பாதபூஜை செய்து, அரச மரியாதையுடன் விருந்தளித்தார்.
உரையாடிக் கொண்டிருந்தபோது, குசேலர் கொண்டு வந்த பரிசைப் பற்றி கிருஷ்ணர் கேட்டார். தயக்கத்துடன் மறைத்து வைத்திருந்த அவலை குசேலர் இறுதியில் அவரிடம் கொடுத்தார். அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட கிருஷ்ணர், ஒரு கைப்பிடி அவலை வாயில் போட்டவுடன் குசேலரின் இல்லம் செல்வச் செழிப்பால் நிரம்பியது. இரண்டாவது கைப்பிடி அவலை உண்டபோது அவரது வறுமை முற்றிலும் நீங்கியது.

மூன்றாவது முறையாக அவலை உண்ண முயன்றபோது, ருக்மணி அதைத் தடுத்தார். அதற்கு கிருஷ்ணர் காரணம் கேட்டபோது, “தங்களுக்குப் பக்தியுடன் சமர்ப்பிக்கப்படும் அனைத்தும் மகா பிரசாதமாகும். அந்த அருள் நிறைந்த பிரசாதத்தில் எனக்கும் ஒரு பங்கு கிடைக்க வேண்டும்” என்று கூறினாள். பின்னர் கிருஷ்ணர் மீதமிருந்த அவலை ருக்மணிக்கு பிரசாதமாக வழங்கினார்.
இந்த நிகழ்வு நமக்கு ஒரு உயர்ந்த ஆன்மிக உண்மையை உணர்த்துகிறது. இறைவனுக்கு அன்போடும் பக்தியோடும் சமர்ப்பிக்கப்படும் நைவேத்தியம், அவரது அருளைப் பெற்று நமக்குத் திரும்ப வழங்கப்படும்போது அது வெறும் உணவாக இல்லாமல், பிரசாதம் என்ற புனித நிலையை அடைகிறது. எனவே, பிரசாதம் என்பது உணவு மட்டுமல்ல; அது இறைவனின் அருள், ஆசீர்வாதம் மற்றும் அன்பின் அடையாளமாகும்.
