ஆடிப்பூரம் ஆண்டாளை வழிபடுவதற்கு மிகவும் சிறப்பான நாளாகும். பெருமாளையே தனது கணவராக ஏற்றுக்கொள்வேன் என்ற உறுதியுடன் பக்தியில் நிலைத்து, இறுதியில் பெருமாளின் திருவடியை அடைந்தவர் ஆண்டாள். எனவே, ஆடிப்பூரம் நாளில் ஆண்டாளை வழிபடுவதன் மூலம் ஆண்டாளின் அருளுடன் பெருமாளின் திருவருளையும் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆண்டாள் மகாலட்சுமியின் அம்சமாகவும், பூமாதேவியின் அவதாரமாகவும் போற்றப்படுகிறார். அவர் அவதரித்த திருநாளான ஆடிப்பூரத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு வைணவத் தலங்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், அலங்காரங்கள், உற்சவங்கள் மற்றும் தேரோட்டங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக ஆண்டாளுடன் தொடர்புடைய சில முக்கிய ஆலயங்களில் ஆடிப்பூர விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பூரம் அன்று தரிசிக்க வேண்டிய முக்கிய ஆலயங்கள்
1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
புகழ்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், பெரியாழ்வாரும் ஆண்டாளும் அவதரித்த புனிதத் தலமாகும். இங்கு நடைபெறும் ஆடிப்பூரத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடிப்பூர நாளில் ஆண்டாளும் ரங்கமன்னாரும் ஒரே தேரில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வரும் திருக்காட்சியை பக்தர்கள் தரிசிக்கலாம். ஆண்டாளை ஒருபோதும் பிரியமாட்டேன் என பெரியாழ்வாருக்கு ரங்கநாதர் அளித்த வாக்கை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு நடைபெறுவதாக ஐதீகம்.
2. ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவில்
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும், ‘பூலோக வைகுண்டம்’ என்றும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவில். ரங்கநாதரையே தனது கணவராக அடைய வேண்டும் என்ற ஆண்டாளின் விருப்பம் நிறைவேறிய திருத்தலமாக ஸ்ரீரங்கம் கருதப்படுகிறது. ஆதிசேஷன் மீது அனந்தசயனக் கோலத்தில் அருள்பாலிக்கும் ரங்கநாதரையும், தனிச் சன்னதியில் நின்ற திருக்கோலத்தில் அருளும் ஆண்டாளையும் ஆடிப்பூர நாளில் தரிசிப்பது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
3. மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில்
‘தட்சிண துவாரகை’ என்று போற்றப்படும் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் செங்கமலத் தாயார் சன்னதியிலும் ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெறுகிறது. விழா நாட்களில் தாயார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆடிப்பூர நாளில் சிறப்பு வளையல் அலங்காரம், பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
4. கும்பகோணம் சாரங்கபாணி கோவில்
கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் கோவிலிலும் ஆடிப்பூர விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஹேம ரிஷியின் தவத்தால் மகாலட்சுமி தாயார் கோமளவல்லி நாச்சியாராக ஆடிப்பூர நாளில் அவதரித்ததாக ஐதீகம். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், மலர் அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறும்.
ஆடிப்பூரம் அன்று வாய்ப்பு இருப்பவர்கள் இந்த முக்கியமான ஆண்டாள் மற்றும் பெருமாள் திருத்தலங்களில் ஏதேனும் ஒன்றுக்குச் சென்று வழிபடலாம். தொலைதூரப் பயணம் செய்ய இயலாதவர்கள் தங்கள் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று அங்கு அருள்பாலிக்கும் ஆண்டாள் மற்றும் பெருமாளை மனமுருகி தரிசித்து வழிபடலாம். ஆடிப்பூர நாளில் ஆண்டாளை பக்தியுடன் வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் பெருகி, ஆண்டாளின் அருள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
