திருத்தணியில் கோலாகலம்: ஆடிக் கிருத்திகை, தெப்பத் திருவிழாவில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணியில் குவிந்தனர்.

முருகப்பெருமானின் 5-ம் படைவீடான திருத்தணியில் ஆடிக் கிருத்திகை விழா கடந்த 4-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து ஆடிப் பரணி விழா நடைபெற்ற நிலையில், நேற்று ஆடிக் கிருத்திகை மற்றும் 3 நாள் தெப்பத் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணியளவில் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு தங்கக் கிரீடம், தங்க வேல், பச்சை மாணிக்க மரகதக் கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. காவடி மண்டபத்தில் உள்ள உற்சவர் முருகப்பெருமானுக்கும் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது.
காலை 11 மணியளவில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் தலைமை குருக்கள் சார்பில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பட்டு வஸ்திரம் கொண்டு வரப்பட்டது. கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி உள்ளிட்டோர் அவர்களை வரவேற்றனர். பின்னர் பட்டு வஸ்திரம் மூலவர் சுப்பிரமணிய சுவாமி மற்றும் உற்சவர் சண்முகருக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரவணப் பொய்கை, மேல் திருத்தணி நல்லாங்குளம் உள்ளிட்ட இடங்களில் புனித நீராடி, பால், பன்னீர், மலர், மயில், அலகு உள்ளிட்ட பல்வேறு வகையான காவடிகளை எடுத்துக்கொண்டு படிக்கட்டுகள் மற்றும் மலைப்பாதை வழியாக கோயிலுக்குச் சென்றனர். நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் மொட்டை அடித்தும், காவடி சுமந்தும், பம்பை, உடுக்கை உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைத்தும், சிலம்பாட்டம் ஆடியும், பக்திப் பாடல்களைப் பாடியபடியும் கோயிலுக்கு வந்தனர்.
தெப்பத்தில் 3 முறை வலம் வந்த உற்சவர்
ஆடிக் கிருத்திகை விழாவின் முக்கிய நிகழ்வான 3 நாள் தெப்பத் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. மலைக்கோயில் காவடி மண்டபத்திலிருந்து உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக புறப்பட்டு தேர் வீதிகளில் உலா வந்தார்.
பின்னர் மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கையில் மின் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். சிறப்பு தீபாராதனையைத் தொடர்ந்து தெப்பத் திருவிழா தொடங்கியது. தெப்பத்தில் உற்சவர் முருகப்பெருமான் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தி இன்னிசை நிகழ்ச்சியுடன் நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழாவையொட்டி திருத்தணி நகரம் முழுவதும் 2,300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும், சென்னையிலிருந்து அரக்கோணம் வரை இயக்கப்படும் 3 மின்சார ரயில்கள் திருத்தணி வரை நீட்டிக்கப்பட்டன.
பக்தர்களின் வசதிக்காக திருத்தணி நகரம் முழுவதும் வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு பொதுநல அமைப்புகள் சார்பில் அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டன. மாவட்ட நிர்வாகம் சார்பில் மருத்துவ முகாம்கள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
