திருநட்டாலம் சங்கரநாராயணர்: திருமணத் தடைகள் நீங்கி, வழக்குகளில் வெற்றி தரும் திருத்தலம்!
ஈசன் சங்கரநாராயணராக அருள்பாலிக்கும் திருத்தலங்கள் அனைத்துமே தனிச்சிறப்பு வாய்ந்தவை. சிவனும் திருமாலும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் இந்தத் தலங்கள், தம்பதி ஒற்றுமையை வளர்ப்பதோடு, வாழ்வுக்குத் தேவையான நலன்களையும், ஆன்மிக ஞானத்தையும் அருள்வதாக பக்தர்கள் நம்புகின்றனர். அத்தகைய சிறப்புமிக்க திருத்தலங்களில் ஒன்றுதான் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள திருநட்டாலம் சங்கரநாராயணர் கோயில்.

நாகர்கோவிலில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் திருநட்டாலம் அமைந்துள்ளது. மகாசிவராத்திரி நாளில் நடைபெறும் புகழ்பெற்ற சிவாலய ஓட்டத்தில் இடம்பெறும் 12-வது சிவத்தலம் என்ற பெருமையும் இத்தலத்திற்கு உண்டு.
பீமனின் கர்வத்தை அடக்கிய புருஷாமிருகம்
குருக்ஷேத்திரப் போருக்குப் பின்னர் ஒரு யாகம் நடத்துவதற்காக புருஷாமிருகம் தேவைப்பட்டது. ஆனால், அதன் எல்லைக்குள் சென்று அதை வெளியே அழைத்து வருவது மிகவும் கடினமான காரியம். அப்போது தனது உடல் வலிமையின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த பீமன், புருஷாமிருகத்தைத் தானே அழைத்து வருவதாகக் கூறினான்.
ஹரியும் சிவனும் ஒன்றே என்பதை உணர்த்தவும், தனது பலத்தின் மீது பீமனுக்கு இருந்த அகந்தையை அகற்றவும் கிருஷ்ணர் ஒரு உபாயத்தைச் சொன்னார். அதன்படி பீமனிடம் 12 ருத்ராட்சங்களைக் கொடுத்து, புருஷாமிருகம் துரத்தி வரும்போது சோர்வு ஏற்பட்டால் ஒவ்வொரு ருத்ராட்சத்தையும் தரையில் வைக்கும்படி அறிவுறுத்தினார்.
அந்த ருத்ராட்சம் தரையில் விழுந்தவுடன் சிவலிங்கமாக மாறும். சிவலிங்கத்தைக் கண்டதும் புருஷாமிருகம் அதை வழிபடாமல் கடந்து செல்லாது. அது வழிபாட்டை முடிக்கும் நேரத்தில் பீமன் வெகுதூரம் தப்பிச் செல்லலாம் என்று கிருஷ்ணர் கூறினார்.
கிருஷ்ணர் கூறியபடியே பீமனும் செய்தான். புருஷாமிருகத்தின் எல்லைக்குச் சென்று அதைக் கோபப்படுத்தி தன்னைத் துரத்தச் செய்தான். பின்னர் ஒவ்வொரு கட்டத்திலும் ருத்ராட்சங்களை வைத்து தப்பித்துக் கொண்டே வந்தான்.
ஆனால் 12 ருத்ராட்சங்களையும் பயன்படுத்திய பின்னரும், புருஷாமிருகத்தின் எல்லையை அவனால் முழுமையாகக் கடக்க முடியவில்லை. இறுதியாக எல்லையைத் தாண்டும் நேரத்தில், பீமனின் ஒரு காலை புருஷாமிருகம் பிடித்துக் கொண்டது. ஒரு கால் அதன் எல்லைக்குள்ளும், மற்றொரு கால் வெளியேயும் இருந்ததால், பீமன் தனக்கே சொந்தம் என்று புருஷாமிருகம் வாதிட்டது.
தர்மரின் தீர்ப்பு
இந்த விவகாரத்தில் யார் நியாயம் என்று தீர்ப்பளிக்கும்படி பீமனிடம், “உன் சகோதரன் தர்மனிடம் சென்று நீதி கேள்” என்று புருஷாமிருகம் கூறியது.
வழக்கு தர்மபுத்திரரிடம் சென்றது. உடன் பிறந்த சகோதரன் என்ற பாசத்தையும் பொருட்படுத்தாமல், தர்மத்தை மட்டுமே முன்னிறுத்திய தர்மர், பீமனின் உடலில் பாதியைப் புருஷாமிருகத்திடம் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
தர்மரின் நியாய உணர்வைக் கண்டு புருஷாமிருகம் பெரிதும் மகிழ்ந்தது. அவரது நேர்மையைப் பாராட்டி பீமனை விடுவித்ததுடன், தன்னுடைய பாலை வழங்கவும் சம்மதித்தது.
அந்த நேரத்தில், பீமன் வைத்த 12-வது ருத்ராட்சத்திலிருந்து ஈசன் சங்கரநாராயணராக காட்சி தந்ததாக தல வரலாறு கூறுகிறது. சிவனும் திருமாலும் ஒரே பரம்பொருள் என்பதை வியாக்ரபாத முனிவராக இருந்த புருஷாமிருகம் உணர்ந்து மகிழ்ந்தார். பீமனும் தனது பலத்தின் மீதிருந்த அகந்தையை விட்டொழித்தான்.
இவ்வாறு ஞானத்தையும் தத்துவ உண்மையையும் உணர்த்தும் அற்புதத் திருத்தலமாக திருநட்டாலம் விளங்குகிறது.
சிவாலய ஓட்டத்தின் நிறைவுத் தலம்
மகாசிவராத்திரி நாளில் நடைபெறும் சிவாலய ஓட்டத்தில் பக்தர்கள் 12 சிவத்தலங்களையும் தரிசித்து, இறுதியாக திருநட்டாலம் சங்கரநாராயணர் கோயிலில் தங்கள் ஓட்டத்தை நிறைவு செய்கிறார்கள்.
இத்தலத்தில் ஒரு பெரிய திருக்குளம் உள்ளது. அதன் மேற்குப் பகுதியில் மகாதேவர் ஆலயமும், கிழக்குப் பகுதியில் சங்கரநாராயணர் ஆலயமும் அமைந்துள்ளன.
மகாதேவர் ஆலயத்தை பீமன் நிறுவியதாகத் தல வரலாறு கூறுகிறது. சற்று உயரமான பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு கொடிமரம் கிடையாது. நுழைவு வாயிலில் பலிபீடமும், கருவறைக்கு முன்பாக ஓடுகளால் வேயப்பட்ட நந்தி மண்டபமும் காணப்படுகின்றன.
வட்ட வடிவில் அமைந்துள்ள கருவறையின் மேற்பகுதி கூம்பு வடிவில் தேக்குமரங்களால் அமைக்கப்பட்டு, செப்புத் தகடால் வேயப்பட்டுள்ளது. கருவறையில் உயரமான பீடத்தின் மீது சுயம்பு லிங்கமாக மகாதேவர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
இங்கு ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி கருவறையை வலம் வந்தால் மனக்குழப்பங்கள் நீங்கி, மனதில் நேர்மறையான எண்ணங்களும் அமைதியும் ஏற்படுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
அரிய கோலத்தில் அருளும் சண்டிகேஸ்வரர்
இத்தலத்தில் தெற்கு நோக்கிய விநாயகர் சந்நிதியும், நாகர் சந்நிதியும் உள்ளன. சண்டிகேஸ்வரர் இங்கு அபூர்வமாக நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும்.
வெளிப்புறத்தில் ‘குச்சரி மூடு’ என்று அழைக்கப்படும் பழமையான மரத்தடியின் கீழ் துர்கை அம்மன், சப்த மாதர்கள், காலபைரவர், சாஸ்தா உள்ளிட்ட தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.
கோயில் நுழைவுப் பகுதியில் நின்ற கோலத்தில் சங்கரநாராயணரை தரிசிக்கலாம். அவரது சிவன் பாகத்தில் காளை வாகனமும், திருமால் பாகத்தில் கருட வாகனமும் அமைந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
மேலும், இத்தலத்துடன் தொடர்புடைய மகாபாரத நிகழ்வை விளக்கும் வகையில், சங்கரநாராயணரின் ஒரு புறத்தில் பீமனும், மறுபுறத்தில் வியாக்ரபாத முனிவரும் அமர்ந்திருக்கும் காட்சியையும் தரிசிக்கலாம்.
சுயம்பு லிங்கமாக சங்கரநாராயணர்
கோயிலுக்குள் நுழைந்ததும் 16 தூண்களைக் கொண்ட நமஸ்கார மண்டபத்தை அடையலாம். அதற்குச் சற்று இடைவெளியில் வட்ட வடிவில் கருவறை அமைந்துள்ளது. விமான கோபுரத்தில் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன.
கருவறையின் இடப்புறத்தில் விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது. விநாயகர் சிவலிங்கத்தின் கோமுகிப் பகுதியில் வீற்றிருக்கும் திருக்கோலமும் சிறப்பானதாகும்.
கருவறையில் சுயம்பு லிங்க வடிவில் சங்கரநாராயணர் அருள்பாலிக்கிறார்.
சிவாலய ஓட்டத்தின்போது பக்தர்கள் தரிசிக்கும் ஒவ்வொரு சிவத்தலத்திலும் திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஓட்டத்தின் நிறைவாக திருநட்டாலம் சங்கரநாராயணர் கோயிலில் சந்தனப் பிரசாதம் பெற்றுக்கொள்வது வழக்கம்.
திருமணத் தடைகள் நீங்கும் தலம்
பங்குனி மாதத்தில் 10 நாள்கள் கொடியேற்றத்துடன் திருவிழா நடைபெறுகிறது. விழா நாட்களில் சுவாமிக்கு சர்க்கரைப் பாயசம், பால் பாயசம், அவல், பஞ்சாமிர்தம் மற்றும் பழங்கள் உள்ளிட்டவை நைவேத்தியமாகப் படைக்கப்படுகின்றன.
திருநட்டாலம் சங்கரநாராயணரை மனமுருகி வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கி, தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குழந்தைப் பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபடுகின்றனர்.
மேலும், வழக்குகளில் வெற்றி பெற வேண்டியும் இத்தலத்தில் சங்கரநாராயணரை வழிபடுவது சிறப்பு என பக்தர்கள் நம்புகின்றனர்.
சிவனும் திருமாலும் ஒன்றே என்ற உயர்ந்த தத்துவத்தை உணர்த்தும் இந்த அற்புதத் திருத்தலத்திற்கு வாய்ப்புள்ளவர்கள் ஒருமுறையேனும் சென்று சங்கரநாராயணரை தரிசித்து வாருங்கள். இறைவனின் அருளால் மன அமைதியும், குடும்பத்தில் ஒற்றுமையும், வாழ்வில் நலன்களும் பெருகட்டும்!
