இராமபிரானின் வரலாறு, அதை கேட்பவரையும் வாசிப்பவரையும் மெய்மறக்கச் செய்யும் அற்புத ஆற்றல் கொண்டது. அந்தக் கதை பலரைக் கவிஞர்களாகவும், பலரைக் கற்பனைச் சிறகுகள் விரிக்கவும் தூண்டியுள்ளது. காவியங்கள், செய்யுள்கள், பாடல்கள், கவிதைகள், இசை, நாடகம், நாட்டியம், ஒற்றைக் கவிதை, குறுங்கவிதை, ஸ்லோகம், விடுகதை எனப் பல்வேறு வடிவங்களில் இராமகதை தலைமுறைகள் கடந்தும் பயணித்துக் கொண்டிருக்கிறது.

“இராமனைப் பற்றி இத்தனை நூல்களும் படைப்புகளுமா?” என்ற வியப்பு இயல்பாகவே நம் மனதில் தோன்றலாம். ஆனால், இராமனின் வரலாறு அதைப் படிப்பவரையும் கேட்பவரையும் கவிஞர்களாக மாற்றும் சக்தி கொண்டது என்று உறுதியாகக் கூறுகிறார் இந்தி மொழியின் புகழ்பெற்ற கவிஞர் மைதிலி சரண் குப்தா.

ராம தும்ஹாரா வ்ரத்தா ஸ்வயம் ஹி காவ்ய ஹை
கோயி கவி பன் ஜாயே ஸஹஜா ஸம்பவ்யா ஹை

இதன் பொருள்: “ராமா! உன்னுடைய கதையே ஒரு மகத்தான காவியம். அந்தக் கதையை எழுத வேண்டும் என்று விரும்புகிற எவரும் இயல்பாகவே கவிஞராகிவிடுவார்.”

மைதிலி சரண் குப்தாவின் இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் உள்ளன. இராமகதை நீண்ட காவியங்களாக மட்டுமல்லாமல், ஒரு சிறிய கவிதை, ஒரு ஸ்லோகம் அல்லது சில வரிகளில்கூட முழுமையாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தி நாட்டுப்புறப் பாடல் மரபில் இடம்பெறும் ஒரு சௌபாயி (நான்கடிக் கவிதை) இதற்கு சிறந்த சான்றாகும்.

பனே பகி த்ரியா சுராயி : பனே பஸே கரி லராயி
ஏக ராம, ஏக ராவண : துல்சி நே ரசா தாவோ போத்தன்ன

இந்தச் சுருக்கமான கவிதையின் பொருள்: ஒருவன் மற்றொருவனின் மனைவியை அபகரித்தான்; அதனால் இருவருக்கும் யுத்தம் ஏற்பட்டது. ஒருவன் இராமன்; மற்றொருவன் இராவணன். இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு துளசிதாசர் அமரக் காவியத்தைப் படைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *