சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் 37-வது தலமாகப் போற்றப்படும் திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் திருக்கோயில், சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் புனிதத் தலமாகும். இத்தலத்தில் மூலவரைச் சுற்றி 1,008 ஈஸ்வரர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது தனிச்சிறப்பாகும்.

மூன்று கோடி தேவர்கள் (திரிகோடி தேவர்கள்) இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டதால், இறைவன் திருக்கோடீஸ்வரர் என்ற திருநாமம் பெற்றார். இதன் காரணமாகவே இவ்வூர் திருக்கோடிக்கா அல்லது திருக்கோடிக்காவல் என்று அழைக்கப்படுகிறது.

கிருத யுகத்தில் வாலகில்யர், வைகானஸர் உள்ளிட்ட 12,000 மகரிஷிகளும், மூன்று கோடி மந்திர தேவதைகளும் ஞானமுக்தி (சாயுஜ்யம்) அடைய வேண்டும் என்ற நோக்கில் வேங்கடகிரியில் மந்திர ஜபத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த துர்வாச மகரிஷி, அவர்களிடம், “குருவின் அருளால் அத்யாத்ம வித்யையை கற்று, பிரம்ம ஞானம் பெற்று, பரமேஸ்வரனின் அருளைப் பெற்றாலே ஞானமுக்தி சாத்தியம். வெறும் தவம் அல்லது மந்திர சக்தியால் சாயுஜ்ய முக்தி கிடைக்காது,” என்று அறிவுரை கூறினார்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட மந்திர தேவதைகள் கோபமடைந்து, துர்வாசரை எதிர்த்துப் பேசினர். “வேங்கடவனை நோக்கி தவம் செய்து இப்போதே முக்தி அடைவோம்” என்று உறுதியாகக் கூறினர். அதற்கு துர்வாசர், “அது நிகழாது” என்று சாபமிட்டார். ஆனால், அந்தச் சாபத்தைப் பொருட்படுத்தாத மந்திர தேவதைகள் அங்கேயே இருந்து திருமால் வழிபாட்டில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

இதற்கிடையில், துர்வாசரின் அறிவுரையை ஏற்றுக்கொண்ட 12,000 மகரிஷிகள் அவருடன் காசிக்குச் சென்று சிவபெருமானை தரிசித்தனர். அப்போது துர்வாசரின் கனவில் திருக்கோடீஸ்வரர் அருள்புரிந்து, மகரிஷிகளுக்கு பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசித்து, அத்யாத்ம ஞானத்தை போதிக்குமாறு ஆணையிட்டார். மேலும், ஒரு மாத காலம் காசியில் தங்கி பின்னர் திருக்கோடிக்காவலுக்கு வருமாறும் கூறினார்.

இறைவனின் ஆணைப்படி துர்வாசரும் மகரிஷிகளும் திருக்கோடிக்காவலை வந்தடைந்தனர். அங்கு சிருங்கோத்பவ தீர்த்தத்தில் புனித நீராடிய மகரிஷிகளுக்கு, திருக்கோடீஸ்வரர் திரிபுரசுந்தரி அம்பாளுடன், விநாயகர் மற்றும் முருகப்பெருமானுடன் திவ்ய தரிசனம் அளித்தார்.

பின்னர், இறைவனின் முன்னிலையில் துர்வாசர் சிருங்கோத்பவ தீர்த்த நீரை 12,000 மகரிஷிகள் மீது தெளித்தார். அந்தக் கணமே தெய்வீக ஜோதி ஒன்று தோன்றி, அனைத்து மகரிஷிகளும் அதில் ஐக்கியமடைந்து ஞானமுக்தியை அடைந்தனர். இந்த அரிய நிகழ்வே திருக்கோடிக்காவல் திருத்தலத்தின் மகிமையை எடுத்துரைக்கும் முக்கிய புராண வரலாறாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *